The relationship between the Indus Tamilnadu

சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு!

உலகின் தொன்மையான நாகரிங்களில் மிகப் பெரியதும் பல துறைகளில் சிறந்ததும் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆகும். ஆனால், உலகின் பிற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகமான சிந்துவெளிக்கு நேர்ந்து வருகிறது. எகிப்து நாகரிகம் எகிப்தியருடையத் சீன நாகரிகம் சீனருடையத் கிரேக்க நாகரிகம் கிரேக்கருடையது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், சிந்துவெளி நாகரிகம் யாருடையது என்பதில் இந்துத்துவவாதிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. சிந்துவெளியை “வேதகால நாகரிகம்” என்று கூசாமல் எழுதியும் பேசியும் வருகின்றனர் இந்துத்துவவாதிகள். திராவிட மாயைக்குள் சிக்கியவர்களோ, “அது திராவிட நாகரிகம்” என பொருந்தாப் பொய்யை உரைத்து வருகின்றனர். சிந்துவெளியைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளும் போதெல்லாம், “பழங்கதை பேசுவதால் என்ன பயன்?” என்று கேலி செய்யும் வழக்கம் ஒருபுறம்.
கடந்தகால வரலாற்றைப் பயிலாமல் புதிய வரலாறு படைக்க இயலாது என்பதே சமூக அறிவியல். சிந்துவெளி நாகரிகம் என்பதே, ஆரியருக்கு எதிரானது. ஆரியரை எதிர்த்துப் போரிட்ட தமிழரின் வரலாறு. ஆரியரின் யாகங்களை சிந்துவெளித் தமிழர் எதிர்த்தனர். ஆரியருக்கும் தமிழருக்குமான பகை சிந்துவெளியிலேயே தொடங்கிவிட்டது. இந்த உண்மைகள் ஆய்வுகளின் அடிப்படையில், மறுக்கவியலா வண்ணம் முன் வைக்கப்பட்டால் மட்டுமே இன்றைய தமிழினம் தன் பகையை எதிர்த்துப் போராடும்.
இந்த அடிப்படையில்தான் சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு குறித்த இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
சிந்துச் சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கான சான்றுகள் ஏராளமாக வெளி வந்துள்ளன. ஆயினும், சிந்துச் சமவெளிக்கும் தமிழகத்திற்குமான உறவு / தொடர்பு குறித்த சான்றுகள் ஏதும் இல்லாத நிலை கடந்த காலத்தில் நிலவியது. ஆய்வுலகில் இது ஒரு குறையாகவே கருதப்பட்டது.
டார்வின் வடித்த பரிணாமக் கோட்பாட்டில் “விடுபட்ட இணைப்பு” என்ற ஒரு குறை நீண்ட காலமாக நிலவியது. மனிதக் குரங்கு மனிதனாக மாறிய நிலையை அவரால் சான்று காட்டி நிறுவ முடியாமல் போனது. அதாவது, அவ்வாறான இரட்டை நிலையில் (குரங்கின் தன்மையும் மனிதத் தன்மையும் கலந்த நிலை) உள்ள விலங்கின் படிமம் எதையும் அவரால் கண்டறிய இயலவில்லை. இந்த விடுபட்ட இணைப்பு, டார்வின் மரணத்திற்குப் பிறகும் புதிராகவும் சவாலாகவும் நீடித்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு, எத்தியோப்பியாவில் அந்த விடுபட்ட இணைப்பிற்குத் தொடர்பு கிடைத்துவிட்டது. டார்வினுக்குக் கிடைக்காத அந்த இரட்டை நிலை விலங்கின் படிமங்கள் எத்தியோப்பியாவில் கண்டறியப்பட்டன. டைம் இதழ் இது குறித்த விரிவான கட்டுரையை அப்போது வெளியிட்டது.
சிந்துவெளிக்கும் தமிழகத் துக்குமான விடுபட்ட இணைப்பு, இணைக்கப்படும் அளவுக்கான ஆய்வுகள் தற்போது வெளிவரத் தொடங்கிவிட்டன. இது தமிழர் வரலாற்று ஆய்வுகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும்.
சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் என்பதைப் பல்வேறு ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். சிந்துவெளி எழுத்துகளின் ஒலி வடிவம், தமிழில் இன்றும் புழங்கும் சொற்களுடன் கூடியவையாக உள்ளன.
“சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்” என்ற நூலை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூல் முனைவர் ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். இந்நூலில் அவர் குறிப்பிடத்தக்க சான்று ஒன்றை விளக்கியுள்ளார். அவரது ஆய்வின் வெளிச்சத்தில், சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு நிலைகளை முன் வைக்கிறேன். முனைவர் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிப் பண்பாட்டுக் கூறுகளை “இந்து மதத்தோடு” தொடர்பு படுத்துகிறார். இக்கருத்தை இக்கட்டுரை ஏற்கவில்லை. இது குறித்து வேறு வாய்ப்பில் விரிவாகக் காணலாம்.
கபிலர் பாடிய இருங்கோவேள்
கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி போரில் மரணமடைந்த பிறகு, பாரியின் நண்பரும் அறிவாளருமான கபிலர், பாரியின் இரு மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரை அழைத்துக் கொண்டு பறம்பு மலையிலிருந்து வெளியேறுகிறார். பாரி மகளிரைத் திருமணம் செய்துகொள்ளும்படி, எருமை நாட்டுத் துவரை நகரில் அரசாண்ட இருங்கோவேள் எனும் மன்னனைச் சந்திக்கிறார் கபிலர். எருமை நாடு என்பது, இன்றைய மைசூர் ஆகும். எருமை நாடு, என்பது பழந்தமிழப் பெயர். எருமை என்பதை வட மொழியில் மகிஷம் என்றாக்கினர். மகிஷ நாடு, பின்னாளில் மைசூர் ஆனது. துவரை நகரம் எனச் சங்க இலக்கியங்கள் குறிக்கும் நகரம் இன்று மைசூர் அருகே உள்ள துவாரகா நகரமே ஆகும். எருமையூர் மகிசூர் என்றாகி, மைசூர் ஆனதுபோல், துவரை நகரம், துவாரகா ஆகிவிட்டது.
துவரையில் இருந்த இருங்கோவேளைச் சந்தித்து, கபிலர் தமது வேண்டுகோளை முன் வைக்கிறார். அதன் சுருக்கம்:
“இருங்கோவேளே… என்னுடன் வந்துள்ள இவர்கள் யார் என்றால், பறம்புத் தலைவன் பாரியின் மகளிர். நான் இவர்கள் தந்தையின் தோழன். நீ யார் தெரியுமா? வடக்கில் வாழ்ந்த முனிவனது பெரும் மண் பாண்டத்தில் தோன்றிய வேளிர் பரம்பரையின் நாற்பத்து ஒன்பதாம் வாரிசு நீ. உன் முன்னோரான வேளிர், வடக்கே… செம்பினால் கட்டியது போன்ற உயரமான மதில் சுவர்களையுடைய துவரை என்னும் நகரை ஆண்டவர்கள்.
யாரும் நெருங்க அச்சப்படும் வீரனே! புலியைக் கொன்றவனே (புலிகடிமாலே)! இந்த மகளிரை ஏற்றுக் கொள்வாயாக!”
– இந்தப் பாடலில்தான் சிந்து வெளிக்கும் தமிழகத்துக் குமான இணைப்பு ஒளிந்துள்ளது.
கபிலர் இருங்கோவேளின் முன்னோர் குறித்து உரைத்த சேதி,
“நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி” என்ற வரியில் தொடங்குகிறது.
“வடபால் முனிவன்” யார் என்பதில் கடந்த காலத்தில் பல முரண்பட்ட முடிவுகள் முன்வைக்கப்பட்டன. வடக்கே வாழ்ந்த முனிவர் ஒருவர், அங்கிருந்த துவரை நகரை ஆண்ட வேளிர்குலத்தவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தார் என்பதே பாடல் கூறும் சேதி.
“வடபால் முனிவன் தடவினுள் தோன்றி” என்றால், வடக்கே வாழ்ந்த முனிவனது “பெரும் மண் பாண்டத்தில் தோன்றி” என்று பொருள். பல உரையாசிரியர்கள் தடவினுள் என்பதற்கு, ‘ஓமகுண்டத்தில்’ என்று தவறாகப் பொருள் கூறினர். ‘தட’ என்பது மண் பாண்டத்தைக் குறிக்கும். சிந்துவெளியின் சின்னங்களில் மண்பாண்டம் ஒன்றாகும். மேலும், தொல் பொருள் ஆய்வுகளில் ‘தட’ என்பது மண்பாண்டத்தையே குறிப்பதாக முனைவர் ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ளார்.
வடபால் முனிவன் என்பவர், அகத்தியர்தான் என்பதே இக் கருத்தின் அடிப்படை. அகத்தியர் குறித்த தகவல்களில் இந்த இடத்திற்குப் பொருத்தமானது ஒன்றைக் காண்போம்.
துவரை என்பது வட நாட்டில் கண்ணன் ஆட்சி செய்த நகரம் அல்லது நாடு. அகத்திய முனிவர், கண்ணனிடமிருந்து 12 வேளிர்குலத்தவரை, தென்னாடு அழைத்து வந்தார் என்பது நச்சினார்க்கினியார் விளக்கம். அகத்தியர் வடக்கே இருந்து வந்தவர் என்பதைத்தான் ஏறத்தாழ எல்லா புராணங்களும் கூறுகின்றன.

Continue reading The relationship between the Indus Tamilnadu

Advertisements