Golden era of Rajaraja Chola period ? (ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?)

rajarajan
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

 இப்படி சோழர் காலத்து அரண்மனைகள்… வழிபாட்டுத்

தலங்கள்… சிற்பங்கள்… ஓவியங்கள்… அவர்களது வீர தீர பராக்கிரமங்கள் எல்லாம் அற்புதம்தான். ஆனால் மக்கள் எப்படி இருந்தார்கள் அவர்கள் காலத்தில்? அதுதானே முக்கியம்?

“மாதம் மும்மாரி பொழிகிறதா மந்திரியாரே?” எனக் கேட்டுவிட்டு உப்பரிகையில் ஓய்வெடுக்கப் போய் விட்டார்களா? அல்லது மக்களோடு மக்களாக நின்று அவர்களது துயரங்களைத் துடைக்கத் துணை நின்றார்களா? இதுதான் இன்று நம் முன் உள்ள கேள்வி.

தஞ்சை பெரிய கோயில் கம்பீரமாக நிற்கிறது வெளிப்புறத்தில். ஆனால் மக்கள் வழிபாடு நடத்துவதற்கும்… வழிபடுவதற்கும் சமத்துவம் நிலவியதா உட்புறத்தில்? இல்லை… இல்லை… இல்லவேயில்லை! என்கின்றன சோழர் காலத்திய கல்வெட்டுகளும் ஆய்வு நூல்களும்.

சமயத்தலத்தில் சமத்துவமின்மை மட்டுமல்ல சோழப் பேரரசில் மக்கள் நிலை எவ்வாறிருந்தது? அவர்களது கல்வி எவ்வாறு இருந்தது? பெண்களது நிலை எவ்வாறு இருந்தது? நிலம் யார் வசம் இருந்தது? பாழாய்ப்போன சாதி என்ன பங்கை ஆற்றியது? இதுவெல்லாம் முக்கியமில்லையா நமக்கு?

சரி… மக்கள் எப்படி இருந்தார்கள்? அதை முதலில் பார்ப்போம். சோழப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காவிரி ஆற்றின் தென் கரையில் இருந்த இரு ஊர்களை தங்களின் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட அறிஞர்கள் அதிர்ந்து போனார்கள். ஊரே சாதியால் பிரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து.

ஒன்பதாம் நூற்றாண்டில் விஜயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றி சோழப் பேரரசின் உருவாக்கத்திற்கு அடித்தளம் இடுகிறான். அதன் பின்னர் வந்த சோழப் பேரரசர்களும் வைதீகம் செழித்து வளர பொன்னையும் பொருளையும் நிலத்தையும் தானமாக அள்ளி வழங்குகிறார்கள். எல்லோருக்கும் அல்ல. சிலருக்கு மட்டும். இதனை துல்லியமாகப் போட்டு உடைக்கிறார் கே.கே.பிள்ளை என்கிற வரலாற்று ஆய்வாளர்.

“வேத நெறி தழைத்தோங்குவதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடி புகுந்த பிராமணருக்கு பொன்னையும் பொருளையும் வழங்கினர். அவர்களுக்குத் தனி நிலங்களும், முழு கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் என பல பெயரில் அழைக்கப்பட்டன. இக்குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிர்வாகத்திற்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் கூட அவற்றினுள் செயல்பட முடியாது. அக்கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள்… கட்டணங்கள்… கடமைகள்… ஆயங்கள்… என அனைத்தில் இருந்தும் முழு விலக்கு அளிக்கப்பட்டன” என்று சோழர்களது கல்வெட்டுக்களில் இருந்தே எடுத்துக் காட்டி அம்பலப்படுத்துகிறார் கே.கே.பிள்ளை.

நிலமும் இலவசம்… வரிகளும் கிடையாது… கட்டணங்களும் இல்லை… அரசன் கூட கேள்வி கேட்க முடியாது… ஆனால் அதே சோழ சாம்ராஜ்ஜியத்தில் மற்ற மக்கள் எப்படி வாழ்ந்தார்களாம்? அதற்கும் இருக்கிறது கல்வெட்டு.

வேதம் ஓத வந்தவர்களுக்கு சோழ அரசு சலுகை காட்டிய அதே வேளையில் உழவர்கள், கைவினைக் கலைஞர்கள், பிறதொழில் செய்வோர் மீது கடுமையான வரிகளை விதித்தது. இவற்றுள் அடித்தள எளிய மக்களான சலவையாளர்கள், குயவர், தறி நெய்பவர், தட்டார், ஓடங்களைச் செலுத்தியோர் மீது முறையே… வண்ணார்பாறை பயன்பாட்டு வரி… குசக்காணம்… தறிக்கூரை… தட்டார்பாட்டம்… என வரி மேல் வரி போட்டுத் தள்ளியதோடு நிறுத்தாமல் உழவர்கள் ஒரு பயிருக்கு ஊடாக இன்னொரு பயிரை வளர்த்தால்கூட அதற்கும் ஊடுபோக்கு என வரி போட்டு பரிபாலனம் செய்தவர்கள்தான் இந்த ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ பராக்கிரம ராஜ கெம்பீர மன்னர்கள்.

நிர்வாகமும் நீதியும் இப்படியிருக்க… பெண்கள் நிலை எப்படி இருந்ததாம்? அதற்கும் இருக்கிறது ஆப்பு. எண்ணற்ற பெண்கள் பொட்டுக் கட்டுதல் என்கிற பெயரால் கோயில்களில் தேவரடியார்களாக ஆக்கப்பட்டதும் இக்காலத்தில்தான்.

அது சரி… கல்வி?

அதுவும் குலத்துக்கொரு நீதிதான். அப்புறம் எங்கு போகும் எல்லோருக்கும் கல்வி?

இதையெல்லாம் பாமரன் சொன்னால் தப்பென்று சொல்லலாம். ஆனால் பண்டிதர்கள் சொன்னால்? அதுவும் இவைகளை தமிழக அரசே வெளியிட்டால்? ஆம் தமிழக அரசே வெளியிட்டது. இப்போதல்ல. 1976-ல். அதுவும் தி.மு.க. அரசு! தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனமே “தமிழ் நில வரலாறு” என்கிற நூலை வெளியிட்டது அதன் பதிப்பாசிரியர் கோ.தங்கவேலு. சோழர் கால ஆட்சி உழைக்கும் மக்களுக்கு எப்பேர்ப்பட்ட பொல்லாத காலமாக விளங்கியது என்பதை அக்குவேறாக அலசியது அந்த நூல். பிற்பாடு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு இது “பிரம்மதேய ஆலோசகர்” குழுவால் தடை செய்யப்பட்டது.

மன்னர் காலத்தில் ஏன் மார்க்சீயம் வரவில்லை? ராஜராஜ சோழன் ஏன் பின் நவீனத்துவம் பற்றிப் பேசவில்லை? என்பது போன்ற கேள்விகளல்ல நமது கேள்விகள்.

ஈழம் வென்றதும்… கடாரம் சென்றதும்… வெற்றிக்கொடி நாட்டியதும் மகிழத்தக்கதுதான். ஆனால்… தனது குடிமக்களுக்குள்ளேயே ஏன் பாகுபாடு காட்டினான்? ஒரு பக்கம் சுகத்தையும், இன்னொரு பக்கம் சுமையையும் ஏற்றியது ஏன்? இந்தக் கேள்விகள் நிறைகளைப் பற்றி சிலாகிக்கும் வேளையிலும் நெஞ்சில் உறுத்தும் கேள்விகள் அல்லவா?

உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

அன்பு நண்பன்
நிர்மல்

அன்புள்ள நிர்மல்,

இருபதாண்டுகளுக்கு முன்னர் தர்மபுரியில் நான் இருந்த காலகட்டத்தில் மாதம் ஒருமுறை என் வீட்டில் நண்பர்கள் கூடி டி எஸ் எலியட்டின் விமர்சனக் கருத்துக்களை வாசித்து விவாதிப்போம். [நண்பர்களில் ஒருவர் மணற்கடிகை எழுதிய எம்.கோபாலகிருஷ்ணன்] அப்போது எலியட் ஒரு சிந்தனையாளனுக்கு இருந்தாகவேண்டிய அடிப்படைக் குணாதிசயமாக வரலாற்றுணர்வு என்பதைச் சொல்லிக்கொண்டே இருப்பதை கவனித்து விவாதித்திருக்கிறோம். அன்று அது என்ன என்று தெளிவாகப் புரிந்ததில்லை. இன்று அதை புரிந்துகொள்ள முடிகிறது.

வரலாற்றை தெரிந்து வைத்திருப்பது முக்கியமல்ல, வரலாற்றுணர்வுடன் தெரிந்துகொள்வது முக்கியம். வரலாற்றுணர்வு என்றால் நான் இப்படி வரையறைசெய்துகொள்வேன். வரலாறு இயங்கும் முறையை உணர்ந்து வரலாற்றினை ஒட்டுமொத்தமாக பார்க்கும் பார்வைதான் வரலாற்றுணர்வு என்பது.

நீங்கள் சொல்லியிருக்கும் கட்டுரைப்பகுதியின் கருத்துக்கள் விவாதிக்கப்படவேண்டியவையே. ஆனால் அந்த உணர்ச்சிவேகம் வரலாற்று விவாதத்துக்கு உரியதல்ல. பொதுவாக எதையுமே மேடைப்பேச்சில் கேட்டுக்கேட்டு பழகியமைலால் மிகையுணர்ச்சியுடன் முன்வைத்தால்மட்டுமே கருத்துக்களுக்கு மதிப்பு என நாம் புரிந்துகொண்டிருக்கிறோம்

இரண்டாவதாக, அந்த தரப்பை எடுத்ததும் அதை முன்வைக்கத் தோன்றுகிறதே ஒழிய அதற்கு எதிரான கருத்துக்கள் என்னென்ன என்று ஆராய நமக்கு தோன்றுவதில்லை. அந்த விஷயம் சார்ந்து வரலாற்றுத்தளத்தில் நிகழ்ந்துள்ள விவாதங்களை முழுமையாக அறிந்துகொள்ளும் உழைப்பை நாம் கொடுப்பதில்லை.

இந்தக்கருத்துக்கள் ஒரு முதிரா மார்க்ஸிய அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதாவது திராவிட இயக்கத்தினர் தத்துவப்புரிதலில்லாமல் அக்கப்போர்த்தனமாக மார்க்ஸியத்தை கையாள்வதன் விளைவு இந்த கருத்துக்கள். மார்க்ஸியத்துக்கு வரலாறு சார்ந்து மிக விரிவான ஒரு முரணியக்க அணுகுமுறை உண்டு. அதைப்பற்றி அடிப்படை புரிதல் கூட இல்லாமல், வரலாற்று பிரக்ஞை என்ற ஒன்றைப்பற்றி அறியாமல், பொதுப்புத்தி சார்ந்து முன்வைக்கப்படும் இந்த நிலைபாட்டுக்கு சும்மா ஒரு மார்க்ஸிய புரட்சி நிறத்தை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தை முழுக்கமுழுக்க மார்க்ஸிய வரலாற்றாய்வை பயன்படுத்தியே ஆராயலாம்.

உண்மையில் வரலாற்றுணர்வுள்ள ஒருவர் இந்தமாதிரி எந்த தீவிர நிலைபாட்டுடனும் முழுக்க ஒத்துப்போக முடியாது. ராஜராஜன் காலகட்டம் பொற்காலம் என்று ஒருவர் சொன்னால் அப்படி இல்லை என்று நான் வாதிடுவேன். அன்றிருந்த எதிர்மறை அம்சங்களை முன்வைப்பேன். ராஜராஜன் காலம் ஒரு அடக்குமுறைக்காலம் என்று ஒருவர் சொன்னால் அதையும் எதிர்த்து வாதிடுவேன். உண்மை இவ்விரு எதிரெதிர் நிலைபாடுகளுக்கு நடுவே உள்ளது.

மேலே சொன்னக் கேள்விகளைக் கேட்கும் நண்பர் முதலில் ராஜராஜசோழன் ஆண்ட பத்தாம் நூற்றாண்டில் உலகத்தின் எந்த பகுதியில் அவர் இன்று பாராட்டத் தக்க சமத்துவமும், ஜனநாயகமும் பொலிந்தன என்று தேடிப்பார்த்திருந்தார் என்றால் அவருக்கு வரலாற்றுணர்வு உருவாக வழி ஒன்று திறந்திருக்கும். மனித வரலாறு தொடர்ச்சியாக தன் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்டபடி வீழ்ச்சியையும், எழுச்சியையும் சந்தித்து முன்னகர்ந்துகொண்டு இருக்கிறது. சமத்துவம் ஜனநாயகம் தனிமனித உரிமை போன்று நாம் இன்று பேசும் பல கருத்துக்கள் அந்த வளர்ச்சிப் போக்கில் மிக பிற்காலத்தில் உருவானவை.

ராஜராஜசோழனை பொற்காலவேந்தன் என்றும் இன்றுள்ளதை விட மேலான ஆட்சி அவனுடையது என்றும் சொல்லும் புளகாங்கிதங்களும் சரி, எதிரான பார்வைகளும் சரி, அந்த காலகட்டப்பின்னணி இல்லாமல் நோக்கும் வரலாற்றுணர்வற்றவைதான்.நிலஉடைமைக் காலகட்டத்தைச் சேர்ந்த மன்னனை அக்கால கட்டச் சூழலில் வைத்துப் பார்க்க வேண்டும், முதலாளித்துவச் சூழலில் அல்ல என்பதைக்கூட புரிந்து கொள்ளாத மார்க்ஸியர்களை நாம் சாபமாக பெற்றிருக்கிறோம். இந்த முட்டாள்களிடம் விவாதித்து இங்கே அறிவித்துறை மலர வேண்டியிருக்கிறது. துரதிருஷ்டம்தான்.

தமிழக வரலாற்றை ஒரு கோட்டுச் சித்திரமாக பார்ப்போம். தொல்பழங்குடி வாழ்க்கை ஒன்று இங்கே இருந்திருக்கிறது. பழங்குடி விழுமியங்களாலும், குலநீதிகளாலும் ஆளப்பட்ட ஒரு காலகட்டம் அது. அந்த காலகட்டத்தின் இறுதியில் நிலவுடைமைச் சமூகம் உருவாகி வந்தது. நிலவுடைமையாளர்களின் தலைவர்கள் சிறு சிறு அரசர்களாக ஆனார்கள். இவர்கள் வேளிர்கள் என்றும் குன்றத் தலைவர்கள் என்றும் கடற்சேர்ப்பர்கள் என்றும் பலவகையினர். இவர்களில் இருந்து சேர பாண்டிய சோழ மன்னர்கள் முறையே உருவாகி வந்தார்கள்.

இவர்கள் தங்கள் இனக்குழு வல்லமையால் பிற மன்னர்களை வென்று கப்பம் கொடுக்கச் செய்து அதன் வழியாக உற்பத்தி உபரியை சேகரித்து வளர்ந்து பெரிய மன்னர்களானார்கள். [ஆரம்பத்தில் சேரர்களும் சோழர்களுமே பலர் இருந்திருக்கிறார்கள்] இவர்கள் பெருங்குடிமன்னர்கள் என்றும் பிறர் சிறுகுடிமன்னர்கள் என்றும் சொல்லப் பட்டார்கள். இந்த முடியுடை மூவேந்தர்கள் குறுமன்னர்களை தங்கள் குடைக்கீழ் கொண்டுவர ஈடுபட்ட போர்களின் சித்திரத்தையே புறநாநூறு காட்டுகிறது. இவர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டு மைய அதிகாரத்தை உருவாக்க முயன்றார்கள். சங்க காலம் என்பது பெரும் போர்களின் காலம்.

சங்கம் மருவிய காலகட்டத்தில் மூவேந்தர்கள் மட்டுமே தமிழகத்தில் முற்றதிகாரத்துடன் எஞ்சியதை நாம் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். அதன்பின் களப்பிரர் ஆட்சி. களப்பிரர் ஆட்சியை வீழ்த்தி பல்லவர்களும், பாண்டியர்களும் ஆட்சியை உருவாக்கினார்கள். விஜயாலய சோழன் சோழர் முடியை மீட்டான். அதன்பின் வந்த சோழர்களை பிற்கால சோழர்கள் என்கிறோம். அந்த மரபில் வந்த பெருமன்னன் ராஜராஜன்.

உலக வரலாற்றை நோக்கும்போது அரசாங்கங்கள் கலைந்து கலைந்து உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு சித்திரத்தையே நாம் நெடுங்காலம் பார்க்கிறோம். குட்டிக் குட்டி அதிகாரங்கள் சேர்ந்து பெரிய அதிகாரமாக ஆவதே அன்றைய வரலாற்றின் தேவையாக இருந்திருக்கிறது. அவ்வாறு பெரிய அதிகாரம் உருவாவதே முன்னேற்றமாக தெரிகிறது. அதை நிறைவேற்றுபவனே வரலாற்று நாயகன். அவனே வரலாற்றை வழி நடத்துகிறான். அவனே வரலாற்றுக்கு பெரும் பங்களிப்பாற்றுகிறான். ஆகவே அவனே மக்களால் கொண்டாடப் படுகிறான்.

ஏன்? குட்டிக் குட்டி அரசுகளாக மக்கள் இருக்கையில் போர் ஓய்வதேயில்லை. இதை எந்த பழங்குடிப் பண்பாட்டிலும் காணலாம். மக்களின் ஆற்றலிலும், செல்வத்திலும் பெரும்பகுதி போர்களில் அழிகிறது. குலங்களும் குடிகளும் ஒன்றாகி பெரிய அதிகாரம் உருவாகும்போது அந்த அதிகாரத்தின் எல்லைக்குள் போர்கள் தவிர்க்கப் படுகின்றன. பிறரை கொள்ளையடித்து வாழ்வது தடை செய்யப் படுகிறது. ஒட்டு மொத்த சமூகமே உற்பத்தியில் ஈடுபட்டாக வேண்டியிருக்கிறது.

அந்த கூட்டான முழு உழைப்பின் வழியாகவே உற்பத்தி பெருகி உபரி உருவாகிறது. அந்த உபரியே அரசாகவும், பண்பாடாகவும் மாறுகிறது. அதன் மூலம் தான் பழங்குடிச் சமூகம் நிலவுடைமைச் சமூகமாக ஆகிறது. அது ஒரு மாபெரும் சமூகப் பாய்ச்சல். குல அரசுகளை அழித்து முற்றதிகார அரசுகளை உருவாக்கிய மன்னர்கள் வரலாற்றில் மிக முற்போக்கான பாத்திரத்தை ஆற்றுகிறார்கள் என மார்க்ஸியம் சொல்வது அதனாலேயே.

ஒட்டுமொத்த அதிகாரம் உருவாகாத வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் மொத்தப் பழங்குடிகளில் பாதிப்பேர் எந்த உற்பத்தியிலும் ஈடுபடாமல் பிறரை கொள்ளையடித்தே வாழ்பவர்களாகவே சமீப காலம் வரை இருந்துள்ளார்கள் என்பதை வைத்து நோக்கினால் இது எவ்வளவு முக்கியம் என தெரியும். ஒரு நிலப்பகுதியில் உறுதியான ஆட்சி உருவாகி கொஞ்சநாள் நீடித்தாலே அந்த பகுதியில் வளம் கொழிக்க ஆரம்பிப்பதை வரலாறெங்கும் காணலாம்.

இரண்டாவதாக, உறுதியான ஆட்சியமைப்பு உருவானால் உற்பத்தியின் உபரியானது சீராக தொகுக்கப் பட்டு மையநிதியாக ஆகிறது. அவ்வாறு பெரிய நிதி உருவாகும் போதே அதைக் கொண்டு அணைக்கட்டுகள், சாலைகள், ஏரிகள், கோயில்கள் போன்ற மாபெரும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். அந்த நிதியில் ஒருபகுதியை சேமித்து பஞ்சம் தாங்கும் அமைப்புகளை உருவாக்க முடியும். அவ்வாறாக, மைய அதிகாரம் உருவான நிலத்திலேயே மக்களின் வாழ்க்கை செழிக்கும். பண்பாடும், சிந்தனைகளும், கலைகளும் வளரும்.

ஆனால் நிலஉடைமைச் சமூகம் பழங்குடி வாழ்க்கையில் உள்ள எளிய சமத்துவக் கூறுகளை அழிக்கும் என்பதும் வரலாறே. பதிலுக்கு அது கறாரான தொழிற்பிரிவினைகளை உருவாக்கும். அந்த தொழிற்பிரிவினைகளை ஒட்டி சமூக வரையறைகளை உருவாக்கும். படிநிலை சமூகத்தை அமைக்கும். அதன்மேல் அரசு அமையும்.அதற்கு ஒட்டுமொத்த சமூகத்தையுமே கட்டுப்படச் செய்யும். அடிமைமுறையும் சாதியமைப்பும் எல்லாம் உருவாவது இவ்வாறுதான்.

ஆனால் இதன் வழியாகவே உற்பத்தி உபரி உருவாகிறது. அந்த உபரியே நாகரீக வளர்ச்சிக்குக் காரணமாக அமைகிறது. இதுதான் மார்க்ஸிய சமூக ஆய்வின் ஆரம்பப் பாடம்.

ஆகவேதான் கரிகால்சோழன், தலையானங்கானத்துசெருவென்ற நெடுஞ்செழியன், செங்குட்டுவன் போன்ற மன்னர்கள் மக்களால் கொண்டாடப்பட்டு வரலாற்றில் தொன்மங்களாகப் பதிவுசெய்யப்பட்டு தலைமுறைகளின் நினைவுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். அவர்களும் பல போர்களைச் செய்தவர்களே. தங்கள் நாட்டுக்குள் உள்ள சிறுமன்னர்களை அழித்தவர்களே. ஆனால் அவர்கள் மக்களின் வாழ்க்கை செழிக்கவும், நாகரீகம் ஓங்கவும் காரணமாக அமைந்தார்கள். அந்த வழியில் வந்த மாமன்னர் ராஜராஜ சோழன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s