வென்ற ஒலிம்பிக் பதக்கத்தை விற்ற வீரர்!

ஒலிம்பிக் போட்டி தடகளத் திறமையை மட்டும் வெளிப்படுத்தும் களம் மட்டும்தானா?. இல்லை… இல்லை. அன்பையும் சகோதரத்துவத்தையும் சக உயிர்கள் மீது அக்கறை காட்டும் குணங்களுக்கும் வித்திடும் களமும் கூட.  ஒலிம்பிக் மெடல்கள் வீட்டில் அலங்காரமாக மட்டும் தொங்குவது இல்லை… உயிர்களை காக்கவும் பல சமயங்களில் உதவியிருக்கின்றன. கடந்த 2004ம் ஆண்டு தமிழகம் உள்பட பல இடங்களை சுனாமித் தாக்கியது. சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் தான் வென்ற தங்கப் பதக்கத்தை ஏலம் விட்டு நிதித் திரட்டினார் அமெரிக்க நீச்சல் வீரர் அந்தோனி இர்வின்.

ஒலிம்பிக் பதக்கத்திற்கு எப்படி விலை கிடையாதோ… அதுபோலவே மனிநேயமிக்கச் செயல்களுக்கும் விலை நிர்ணயிக்க முடியாதுதான். ரியோ ஒலிம்பிக்கில் போலந்து என்ற சிறிய தேசம் 2 தங்கப் பதக்கங்களும் 3 வெள்ளிப் பதக்கங்களும் 6 வெண்கலப் பதக்கங்களும் வென்றிருந்தது. அதில் மாலோவ்செஸ்கி என்ற வட்டு எறிதல் வீரர் வென்ற வெள்ளிப் பதக்கம் பற்றிதான் இப்போது உலகமே பேசுகிறது. அமெரிக்கா வென்ற அத்தனை தங்கப்பதக்கங்கள் கூட இந்த ஒற்றை வெள்ளிப் பதக்கத்திற்கு இணையாகாது என்ற விவாதமே எழுந்திருக்கிறது.

போலந்து வட்டு எறிதல் வீரர் பெடர் மலோவ்செஸ்கி, போட்டியில் தான் வென்ற வெள்ளிப்பதக்கத்தை விற்பதாய் ஃபேஸ்புக்கில் ஒரு நிலைத்தகவல் இட்டார். ‘வென்ற பதக்கத்தை விற்கிறாரா?’ என்று போலந்து அரசு வரை பதறியது. ஆனால் காரணம் அறிந்ததும் நாடே நெகிழ்ந்தது.

ஆம்.

போலந்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஓலக்கிற்கு பிறந்த 6 மாதத்தில் இருந்து கண்ணில் புற்றுநோய். இதனால் பார்வை இழக்கும் அபாயம் மட்டுமல்ல, கடுமையான வலியாலும் சிறுவன் அவதிப்பட்டு வந்தான். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தின் டேவிட் அப்ராம்சன்ஸ் புற்று நோய் மையத்தில் மட்டும்தான் சிறுவனின் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும்.  சிகிச்சை பெற வழியில்லாமல் சிறுவன் ஓலக் வலியால் தினம் தினம் துடித்து வந்தான். சிறுவனின் நிலையை அறிந்த, போலந்து வட்டு எறிதல் வீரர் பெடர் மலோவ்செஸ்கி அந்த சிறுவனுக்கு உதவி செய்ய முடிவு செய்திருந்தார். ரியோவில் பதக்கம் வென்றால், அதனை ஏலம் விட்டு சிறுவனின் சிகிச்சைக்கு நிதி திரட்டத் திட்டமிட்டிருந்தார்.

மலோவ்செஸ்கி நினைத்தது போலவே , ரியோ ஒலிம்பிக்கில் வட்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ரியோவில் இருந்து தாயகம் திரும்பியதும்.,” சிறுவனின் சிசிச்சைக்காக தனது வெள்ளிப்பதக்கத்தை ஏலம் விடுவதாக மலோவ்செஸ்கி அறிவித்து ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ” நான் ரியோவில் தங்கப்பதக்கத்திற்காக போட்டியிட்டேன். தற்போது அதனை விட விலை உயர்ந்த ஒரு விஷயத்தில் பங்கேற்க உங்கள் அனைவரையும்அழைக்கிறேன். நீங்கள் எனக்கு உதவி செய்தால், நான் வென்ற வெள்ளிப்பதக்கம் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை விட அதிக மதிப்பு வாய்ந்ததாக மாறும்” எனக் குறிப்பிட்டிருந்தார். மாலோசெஸ்கியின் இந்த பதிவு ஃபேஸ்புக்கில் வைரலாக மாறியது.

உலகம் முழுக்க இருந்து பலரும் அவரது வெள்ளிப் பதக்கத்தை ஏலம் எடுக்க முன்வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ஏலம் நடைபெற்றது. பதக்கத்தின் ஆரம்ப மதிப்பாக 19 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டது. போலந்தை சேர்ந்த தொழிலதிபர் செபஸ்டியான் கெல்சிஸ்க் இந்த வெள்ளிப்பதக்கத்தை 84 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுத்தார். சிறுவனின் சிகிச்சைக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் அமரிக்க டாலர்கள் தேவை. சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காக போலந்து நாட்டைச் சேர்ந்த அறக்கட்டளை ஏற்கனவே கொஞ்சம் நிதி திரட்டியிருந்தது. இப்பொது மலோவ்செஸ்கியின் வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட்டு கிடைத்த தொகையும் சேர்ந்ததால், சிகிச்சைக்கான நிதி திரண்டு விட்டது. இதையடுத்து, சிறுவன் ஓலக்கிற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்டு, மலோவ்செஸ்கி வெள்ளிப்பதக்கத்தை ஏலம் எடுத்தவர்களுக்கும் ஏலத்தில் பங்கேற்றவர்களுக்கும் நன்றி தெரிவித்து ஃபேஸ்புக்கில் மீண்டும் ஒரு பதிவேற்றியுள்ளார். , ” கடந்த வாரத்தில் நான் வென்ற வெள்ளிப்பதக்கத்தின் மதிப்பு இப்போது இன்னும் அதிகரித்து விட்டது. கைகோர்த்து நடந்தால் அற்புதத்தை விளைவிக்க முடியும். கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. லிட்டில் ஓலக்கின் சிகிச்சைக்கு  உதவியவர்களுக்கு நன்றி” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பலர் தங்கம் வெல்ல முடியவில்லையே என்ற சோகத்தில் இப்போதும் ஆழ்ந்திருக்கின்றனர். சிலர் தங்க வேட்டையே நடத்தி சென்றுள்ளனர். இதற்கிடையில், தான் வென்ற பதக்கம் மதிப்பே இல்லாதது என மலோவ்செஸ்கி போன்றவர்கள் உணர்த்தி விடுகின்றனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s