ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட்

 

download (18)

ரோமியோ ஜூலியட் கதை காலம் கடந்த காதல் கதை. உலகில் மொத்தம் பத்து காதல் கதைகளை பட்டியலிட்டால் அதில் இந்த ரோமியோ ஜூலியட் கதை கண்டிப்பாக இடம் பெறும். இரண்டு தனிக்குடிகளுக்கு இடையில் உள்ள பகைமை இரண்டு காதலர்களை வாழ்வில் ஒன்று சேரவிடாமல் மரணத்தில் ஒன்று சேர்க்கும் கதை. ஷேக்ஸ்பியர் இதனை எழுதத் தொடங்கிய தனது ஆரம்ப காலங்களில் காதல் ஒன்றும் சோகத்தில் முடியும் விஷயமாக இருக்கவில்லை. எழுதப்பட்ட காலத்தில் இந்த நாடகம் மிகவும் பிரபலமானது. ஷேக்ஸ்பியரின் வாழ்நாளுக்குள் இரண்டு முறை இந்த நாடகம் நூல் வடிவில் அச்சேறியது, மிகப் பெரிய சாதனை. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அச்சுக்கலை இப்போது இருப்பதை போல நவீன தொழில்நுட்பத்துடன் இருக்கவில்லை. இதில் வரும் மேல்மாடக் காட்சி இன்றளவில் பெரிதும் ரசிக்கபட்டும், பலரது கற்பனைக்கு ஒரு உந்துதலாகவும் இருந்து வருகிறது.

பெரும்பாலான ஷேக்ஸ்பியரின்  நாடகங்கள் தனக்கு முன்னால்  இருந்த நூல்களின் கதைகளை  ஒட்டியே இருக்கும். இந்த  நாடகம் கூட ஆர்தர் ப்ரூக்  என்ற எழுத்தாளரின் ரோமியோ  ஜூலியட் இருவரின் சோக  வரலாறு என்ற நூலிலிருந்து  எடுத்தாளப்பட்டட கதைதான். குடிவழி வம்சாவழி பெருமைகளைத் தூக்கி நிறுத்தும் நாடகம் என்றாலும் இந்த ரோமியோ ஜூலியட் நாடகம் ரசிகர்களிடம் எளிதில் சென்றடைந்த நாடகம். ஜூலியஸ் சீசரைப் போலவே எலிசபெத் கால நாடக உலகை பற்றி அறிந்து கொள்ள மேற்கத்திய மாணவர்களால் பெரிதும் விரும்பி படிக்கப்பட்ட நாடகம் இதுவாகும். இந்த நாடகம் முழுவதும் ஷேக்ஸ்பியர் மொறு மொறு என்று தூவிய காதல் கவிதைகளுக்காவே இந்த நாடகம் பலரைச் சென்றடைந்தது. அனைத்து மறுக்கப்பட்ட காதல் கதைகளுக்கும் இந்த ரோமியோ ஜூலியட் முன்மாதிரி.

கதைச் சுருக்கம் : மாண்டேக் மற்றும் கபுலெட் இரண்டும்இத்தாலி நாட்டில் உள்ள வெரோனா நகரின் இரண்டு உயர்குடிகள். அரசாங்கப் பணியில் உயர்பதவி வகிப்பவர்கள். ஆனால் இரண்டு குடிகளுக்கும் நடுவில் ஜென்மப்பகை ஒன்று வம்சாவழியாகத் தொடர்கிறது. இரண்டு குடியினருக்கும் நடுவில் நடந்த கைகலப்பிற்கு பின்புதான் ரோமியோ அறிமுகமாகிறான்.இந்தக் கைகலப்பினால் வெறுத்துப்போன வெனோரா நகர இளவரசர் எஸ்கலஸ் தலையிட்டு இனி இது போன்ற மோதல் நிகழ்ந்தால் இரண்டு குடிகளும் கடுமையான தண்டனை பெறநேரிடும் என்று எச்சரித்து விடுகிறார்.

நாடகத்தில் வெறும்  வாய்மொழியில் அறியப்படும்  ரோசலின் என்ற பெண்தான்  ரோமியோவின் முதல் காதல். ஆனால் கைகூடாத காதல். ரோசலின்  நினைவாக வாடும் ரோமியோ. பதின்மூன்று வயதே நிரம்பிய ஜூலியட் வெனோராவின் துடிப்பும் வசீகரமும் காதலும் நிரம்பிய பாரிஸ் என்ற இளைஞனுக்கு நிச்சயம் செய்யப்படுகிறாள். இருவரும் ஜூலியட்டின் தந்தையான திருவாளர் . கபுலெட் இல்லத்தில் இரவு நடைபெற உள்ள முகமூடி பால் நடனத்தில் சந்திக்க உள்ளனர். ரோமியோவும் அந்த பால் நடனத்தில் மாற்றுடையில் தனது காதலியான ரோசலின் கலந்து கொள்ளஇருப்பது தெரிந்து படு உற்சாகமாக கிளம்பி வருகிறான். விதி மாற்று வழிகளை காட்டிவிட ரோமியோவும் ஜூலியட்டும் காதலில் வீழ்கின்றனர். ஜூலியட்டின் ஒன்றுவிட்ட சகோதரன் திபால்ட் ரோமியோவை அடையாளம் கண்டு கொள்கிறான். அந்த இடத்திலேயே ரோமியோவை கொன்றுவிட முயற்சிக்கிறான். அவன் முயற்சி வெற்றியடையவில்லை. கபுலெட் பிரபு தடுத்து விடுகிறார்.

பார்ட்டி முடிந்ததும் ரோமியோ ஜூலியட் மாளிகையில் அவளுடைய மேல்மாடத்தின் கீழ் உள்ள இடத்தில் பதுங்கி தங்களது திருமணம் குறித்து திட்டமிடுகிறான்.

இனிமேல்தான் கதையில் சிக்கல் ஏற்படுகிறது. ரோமியோ ஜூலியட் இருவர் மீதும் அபிமானம் கொண்ட பாதிரியார் லாரன்சை ரோமியோ சந்தித்து தனது காதலைத் தெரிவிக்கிறான். தனது செவிலித்தாயிடம் ஜூலியட் தனது காதலைத் தெரிவிக்கிறாள். செவிலி ரோமியோவையும் எந்த தருணத்தையும் நகைப்புக்கிடமாக்கும் அவனது நண்பன் மெர்குஷியோவையும் சந்திக்கிறாள். ரோமியோ செவிலியிடம் ஜூலியட்டை பாதிரியார் லாரன்ஸ் இருக்கும் இடத்திற்கு அழைத்துவரச் சொல்லுகிறான். மறுநாள் பாதிரியார் லாரன்ஸ் முன்பு ரோமியோ ஜூலியட்டை ரகசியமாக மணக்கிறான்.  செவிலி மணநாள் இரவு ஜூலியட்டின் சாளரத்தை எட்டுவதற்கு ஒரு ஏணி ஏற்பாடு செய்கிறாள்.

மறுநாள் ரோமியோவின் ஒன்றுவிட்ட சகோதரனும் அவசரக்காரனுமான திபால்ட் ரோமியோவைத் தேடி வருகிறான். ரோமியோவைக் காணாது ரோமியோவின் நண்பர்களான பென்வோலியோ மற்றும் மெற்குஷியோ இருவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான். நடுவில் நுழையும் ரோமியோவை திபால்ட் வலுச் சண்டைக்கு இழுக்கிறான். அந்த நேரம் சமாதானமாக போகவே ரோமியோ தீர்மானிக்கிறான். ஆனால் திபால்டின் பேச்சினால் கிளர்ந்தெழும் மெற்குஷியோ அவனுடன் சண்டைக்கு செல்கிறான். திபால்ட் கையில் உள்ள வாளால் மெற்குஷியோவைத் தாக்கி விட்டு சென்று விடுகிறான். மெற்குஷியோ இறந்து விடுகிறான். இதனால் ஆத்திரமடையும் ரோமியோ திபால்டை வாளால் வெட்டிக் கொன்று விடுகிறான். இந்தக் கலவரத்தின் இறுதியில் வரும் இளவரசர் எஸ்கலஸ் ரோமியோவை வெனோரா நகரத்திற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவிடுகிறார்.

அந்த இரவு ஜூலியட்டின் அறைக்குள் ரோமியோ நுழைகிறான். அந்த இரவு அவர்களது முதல்இரவாகிறது. விதியின் விளையாட்டு குரூரமாகிறது. முதல் இரவு கழிந்த மறுநாள் ஜூலியட்டின் பெற்றோர்களான கபுலெட் தம்பதிகள் சுளியட்டிற்கு பாரிசை நிச்சயம் செய்கின்றனர். ஜூலியட் மறுத்தும் பயனில்லை.

ஜூலியட் தங்கள் இருவருக்கும் மணமுடித்து வைத்த பாதிரியார் லாரன்சை சந்திக்கிறாள். அப்போது அந்தப் பாதிரியார் மூலிகை மருந்து ஒன்றை ஜூலியட்டிற்கு தருகிறார். அந்த மருந்தை உட்கொள்வதால் சரியாக 42 மணி நேரத்திற்கு இறந்தவளைப் போல பிணமாக கிடக்க்கலாம் என்றும் அவள் இறந்து விட்டாள் என்று கபுலட் தம்பதியர் அவளை மயானத்தில் அடக்கம் செய்வார்கள் என்றும் அதைக் கேள்விப்பட்டு ஓடிவந்து பார்க்கும் ரோமியோ ஜூலியட் சாகவில்லை என்பது அறிந்து அவளை அழைத்துக் கொண்டு விடுவான் என்கிறார்

Advertisements