தீபாவளி பண்டிகை (எதற்காக கொண்டாடப்படுகிறது )

 தீபாவளி பண்டிகை

இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமான பண்டிகை தீபாவளிதான். மதம், மொழி, கலாச்சாரம் இவற்றினால், ஏனைய பண்டிகைகளுக்கு மக்கள் காட்டும் ஆர்வத்தில் வித்தியாசமிருக்கலாம். ஆனால், ஏழை முதல் பணக்காரன் வரை எல்லா இனத்தவராலும் ஒரே மாதிரி வரவேற்புப் பெறும் பண்டிகை தீபாவளி.

ea630ed7b38f1d6d361c5090f44aac15

இந்தியாவின் வட மாநிலங்களில் இதைத் ‘ திவாளி’ என்கிறார்கள். அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் தீபாவளிப்பண்டிகை வருகிறது.

தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். ஒளித்திருநாள் என்று கூறுவதும் பொருந்தும். வட மாநிலங்களில், தீபாவளியின்போது வீடுகளில் தீபாலங்காரம் விசேடமான அம்சமாகும். தீவாஸ் எனப்படும் அகல் விளக்குகள் அங்கே ஒளி வீசிச் சிரித்துக்கொண்டிருக்கும்.

maxresdefault

இந்தியாவின் தென் மாநிலங்களில், வீடுகளிலும், கோயில்களிலும் அகல் விளக்குகளால் அலங்காரம் செய்யும் வழக்கத்தைக் கார்த்திகை மாதத்துக் கிருத்திகையில் வரும் கார்த்திகைப் பண்டிகையில் கடைப்பிடிக்கின்றார்கள்.

இதேபோல், ‘திவாளி’ பண்டிகை வட மாநிலங்களில் லக்ஷ்மி பூஜையாகக் கருதப்படுகின்றது. வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அந்த ஆண்டின் புதுக்கணக்கை ‘திவாளி’ பண்டிகையின்போதுதான் ஆரம்பிப்பது வழக்கம்.

தீபாவளிப் பண்டிகை தோன்றக் காரணங்கள்

radhakrishna1images

நரகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்று மக்களுக்கு விடுதலையும், மகிழ்ச்சியும் அளித்தார், மகாவிஷ்ணுவாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான். அவனைத் தான் கொல்லாமல், தன் மனைவி சத்தியபாமாவின் கைகளால் அவன் கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே, போர்க்களத்தில் மயங்கித் தேரில் சரிந்து வீழ்ந்து மாயம் புரிகிறார், கண்ணன் ( கிருஷ்ணன் ).

தன் தாயைத்தவிரத் தனக்கு வேறு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றான், நரகாசுரன். எந்தத் தாயாவது தன் மகனைக் கொல்லுவாளா? ஆனால், சத்தியபாமாவுக்கோ, நரகாசுரன் தன் மகன் என்று தெரியாது. தெரியாதபடி மாயம் செய்து மயங்கியவர் கிருஷ்ணன்.

ஆகவே, கணவனைக் காக்க, தேரோட்டியாகப் போர்க்களத்துக்குச் சென்றிருந்த சத்தியபாமா, தன் வில்லை எடுத்து வளைத்தாள். அடங்காத கோபத்துடன், நரகாசுரனைக் கொன்று வீழ்த்தினாள். உயிர் பிரியும்போது ஞானம் பெற்ற அந்த அரக்கன், ஒரு வரம் கேட்டான்.

” என் மரண தினத்தை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்.என் கொடிய செயல்களால் இருண்டு கிடந்த இல்லங்களில் ஒளி விளங்க வேண்டும். மக்கள் நீராடி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு மகிழ்ச்சியாக இப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.”

என்று கேட்டுக்கொண்டான்.

நரகாசுரன் கொல்லப்பட்ட அத் தினத்தையே தீபாவளிப்பண்டிகையாகக் கொண்டாடுவதாகப் புராணங்கள் விளக்குகின்றன. அதனால், இத்தினத்தை, நரக சதுர்த்தி என்றும் அழைப்பார்கள்.

கிருபானந்த வாரியார், ” பார்வதி தேவியர் கேதார கெளரி விரதம் இருந்து, சிவபெருமானின் இடப்பக்கத்தில் இடம்பெற்ற திருநாளே தீப விழாவாகக் கொண்டாடப்படுகிறது ” என்றுரைக்கிறார்.

 தீபாவளி விளையாட்டு

draupadi_s_presented_to_a_pachisi_game

தீபாவளித் திருநாளில், திருக்கயிலாயத்தில், சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாட்டு ஆடியதாக ஒரு புராணக் குறிப்பு உண்டு. இதை நினைவூட்டும் விதத்தில் குஜராத்தில் தீபாவளி தினத்தில் இந்து மக்கள் சொக்கட்டான் விளையாட்டு ஆடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கானக வாழ்வு முடிந்து அரக்கன் இராவணனை அழித்து, சீதையை மீட்ட இராமபிரான், வெற்றித் திருமகனாக அயோத்தி திரும்பிய திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்கள் தோறும் தீபங்களை ஏற்றிவைத்து மகிழ்ச்சிப் பெருவிழாவாகக் கொண்டாடினார்களாம். அதுவே தீபத் திருநாளாக மாறியது என்று உரைக்கும் சான்றோரும் உண்டு.

இப்படி பலவிதமான காரணங்கள் கொண்டு தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டாலும், அத்திருநாள் நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றே ஒன்றுதான். ” தீமைகள் என்னும் இருள் அகன்று, உலகம் முழுவதும் பக்திப் பேரொளியைப் பெற வேண்டும் ” என்பதே அது. எனவே, தீபாவளித் திருநாளில், பெரியவர்கள் வகுத்துத் தந்த வழியில், முறையாக இறைவனைப் பூஜித்து அவனது அருள் பெற வேண்டும்.

தீபாவளிப் பூஜையும், கொண்டாட்டமும்

துலா மாதம் என்னும் ஐப்பசி மாதத்தில், தேய்பிறை நாட்களில், அமாவாசைக்கு முதல்நாள் வரும் சதுர்த்தியன்று, மிக அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து ஆல், அரசு, புரசு, மாவங்கை போன்ற மரங்களின் இலை போட்டுக் கொதிக்க வைத்த சுடுநீரில் குளித்தல் வேண்டும்.

ஐப்பசி மாத விழாக்களைக் குறிக்கும் ‘ துலா மாச மகாத்மியம் ” என்னும் நூலில், ‘ தைலே லக்ஷ்மி, ஜலே கங்கா ‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதிகாலையில் எண்ணெய் தேய்த்து நீராடுவதன் மூலம், கங்காதேவி, லக்ஷ்மி தேவி ஆகியோரின் அருளைப் பெறலாம். அதிகாலையில் நீராடுதல் கங்கை நதியில் நீராடிய பலனைத் தரும் என்பது ஒரு நம்பிக்கை.

புத்தாடை 

diwali-3celebrate-diwali

பூஜை அறையில், கடவுள் படங்களின் முன்னே, முதல்நாள் இரவே, புது ஆடைகளுக்கு மஞ்சள் தொட்டுப்பூசிக் குவியலாக வைத்திருப்பார்கள். அதிகாலையில் எழுந்து குத்து விளக்கேற்றி , ஊதுவத்தி கொளுத்திக் காத்திருப்பார்கள் , குடும்பத்தின் பெரியவர்கள். குளித்து முடித்து வருபவர்கள்,

தீபாவளிப் பண்டிகைக்கான புத்தாடையைப் பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடு பெற்றுக்கொள்வார்கள். புதிய ஆடைகளை அணிந்து, பூஜை அறையில் உள்ள கடவுளை வணங்கி, பெரியவர்களையும் வணங்க வேண்டும்.

 தீபாவளி பண்டிகை நாளில்  கடவுளுக்கு படைக்க வேண்டிய உணவு 

இல்லத்தில் , சுத்தமான , சுவையான சிற்றுண்டிகள் செய்து, கடவுள் படங்களின்முன் படைக்க வேண்டும். இல்லம் முழுவதும் தீபங்கள் ஏற்றி வைத்தல் மிகவும் சிறப்பு. இதன்பின்னர், முறையாக ஸ்ரீ விஷ்ணு பகவானையும், ஸ்ரீ லக்ஷ்மி தேவியையும் வழிபட வேண்டும். பூஜைக்குப்பின்னர், சிற்றுண்டிகளைக் குடும்பத்தில் உள்ள அனைவரும் உண்டு, அயலில் உள்ள மக்களுக்கும் கொடுத்து எல்லாரும் மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாட வேண்டும்.

தீபாவளி அன்று  பட்டாசு வெடிப்பதன் அர்த்தம் 

unnamed

பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை, தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து மகிழ்வார்கள். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மாச்சரியம் ( மூட எண்ணம் ) ஆகிய தீய சக்திகளை, இறைவனுடைய திருநாமங்களின் மகிமையால் தூள்தூளாக்க வேண்டும் என்பதற்காகவே, தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்து மகிழ்கிறோம்.

இந்த இனிய நாளில், நாமும், நம் உள்ளமென்னும் அகல் விளக்கில் அன்பென்னும் திரியேற்றி, கருணை என்னும் நெய் ஊற்றிப் பக்திச் சுடர் ஒளிக்கச் செய்து உலகை அமைதியே ஆட்சி செய்ய உறுதி கொள்ள வேண்டும். அப்போது, இந்தத் தீபாவளித் திருநாள் மட்டுமல்ல, நாம் வாழுகின்ற ஒவ்வொரு நாளும் நமக்குத் தித்திக்கும் தீபாவளிதான்.

happy-diwali-whatsapp-dp-8

                         அனைவருக்கும் இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s