சென்னை: சென்னையில் பேய்க்காற்று வீசுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கனமழையுடன் பேய்க்காற்று வீசி வருகிறது. தற்போது சென்னையில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.

காற்று சூழற்றியடிப்பதால் மரங்கள், மின்கம்பங்கள், விளம்பரப் பலகைகள் சாய்ந்து வருகின்றன. சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் வீடுகளில் இருந்தாலும் காற்றின் பேயிரைச்சல் சப்தத்தை கேட்டு பயத்தில் உள்ளனர். எங்கள் வாழ்வில் இப்படி ஒரு பேய்க்காற்றை பார்த்ததே இல்லை என்று சென்னைவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புயலின் மையப்பகுதி கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 120 முதல் 140 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
டிசம்பர் வெள்ள பாதிப்புக்கு சற்றும் குறையாமல் விளாசி எடுக்கும் “வர்தா”.. நிலை குலைந்தது சென்னை! கடந்த 2015ல் ஏற்பட்ட டிசம்பர் வெள்ள பாதிப்புக்கு சற்றும் குறையாத சேதத்தை ஏற்படுத்தி வருகிறது வர்தா புயல். சென்னை முழுவதும் பேய்க்காற்றால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளத்தின்போது ஏற்பட்ட பாதிப்புக்கு இணையான பாதிப்பை தற்போது வர்தா புயல் மூலம் சந்தித்துள்ளது சென்னை. சுழற்றியடித்து வீசும் பேய்க்காற்றால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில் சென்னையிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் வரலாறு காணாத பேய்க்காற்று வீசி வருகிறது.
இதற்கு முன்பு பலமுறை இதுபோன்ற சூழலை மக்கள் சந்தித்திருந்தாலும் இப்போது மிகக் கடுமையான காற்று வீசி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காற்றின் வேகத்தால் பெரிய பெரிய மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. வாகனங்களை ஓட்ட முடியாமல் மக்கள் திணறும் நிலை உள்ளது. நடக்க முடியவில்லை. நடந்தால் தடுமாறி விழ வேண்டியதுதான்.
ஜன்னல் கதவுகள் உடைந்தன
நகர் முழுவதும் பலஇடங்களில் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. மழை நீர் தேங்கிக் கிடக்கின்றன. பல இடங்களில் வீடுகளின் கதவு, ஜன்னல்கள் உடைந்துள்ளன. வாட்டர் டேங்குகள் பறந்துள்ளன.
மீனவர்கள் கடும் பாதிப்பு
படகுகள் சேதம் பழவேற்காடு பகுதியில் கடலோரத்தில் உள்ள மீனவ குப்பங்களுக்குள் கடல் நீர் புகுந்ததால், சில வீடுகள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. இங்குள்ள கரைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 படகுகள் சேதம் அடைந்தன.
ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரை – தாம்பரம், சென்ட்ரல் – ஆவடி, சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் மின்சார ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையம் பகுதியில் பலத்த காற்றுடன், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு வந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாகவே புறப்பட்டுச் செல்கின்றன. பிற்பகலில் இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக சென்னையில் தரையிறங்க வேண்டிய அனைத்து விமானங்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகின்றன.