உலகதாய்மொழி தினம் – நம்ம தமிழ்நாட்டில்

மதுரை பாஷை

   பொட்ட புள்ளங்க சூதானமா இருங்கப்பு… மதுரையின் பாசமான பாஷை

உலக தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படும் இந்த நாளில் நான் பிறந்து வளர்ந்த என் மதுரை மண்ணின் பாசமான வார்த்தைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

முரட்டுத்தனமாக கரடு முரடாக இருந்தாலும் ஒவ்வொரு வார்த்தையிலும் பாசம் இழையோடுவதை உணர முடியும்.

1373351457458image

மதுரைக்காரவங்க ஒண்ணு கூடினா போதும் அங்கே அவர்கள் பேசும் பாஷையை கேட்க கேட்க ஒருவித நேசம் இளையோடும். வயது மூத்த ஆண்களைப் பார்த்தால் அண்ணே… என்றும் பெண்களை அக்கா என்றும் ஒருவித ராகக்தோடு அழைப்பதை கேட்க முடியும். ஒவ்வொரு வார்த்தையிலும் ஒருவித நேசம் இழையோடும், கோபப்பட்டாலும் குணத்தோடு பேசுவார்கள் மதுரை மண்ணின் மக்கள்

tamilnadu_madurai_vandiyur-mariamman-teppakulam-temple-in-madurai

என்னத்த அங்கிட்டு பாத்துக்கிட்டு… இங்கிட்டு வா… என்ன நின்டு போயிர போவுது… பய்ய போலாம் ஒண்ணும் கொறஞ்சு போயிறாது என்பார்கள். வெள்ளனெ வீட்டுக்கு வரணும்னு நினைச்சேன்… ஆனா அசந்துட்டேன்… விடிஞ்சிருச்சு. உசக்க தலைய தூக்கி பாக்கறேன் சாவல காணோம் என்பார்கள். பொட்டப்புள்ளங்கள பாத்து பல்ல காட்டாதீங்க… வஞ்சி புடுவாங்கடா…அவங்க பேச மாட்டாங்க அப்புறம் அருவாதாண்டா பேசும் என்று எச்சரிப்பார்கள். என்னத்த பெறாக்கு பாத்துக்கிட்டு சோலிய பாப்பியா… கோளார இருக்கணும்பா… என்று ஒருவித சூதானத்தோடு பேசுவார்கள். அவிங்க வந்தாய்ங்களா? எங்கிட்டு போனாய்ங்க? ஒரு லக்குல நிக்க மாட்டமா திரியிறாங்க என்பார்கள். ஒரே அலப்பறையா இருக்கேப்பா.. லந்த குடுத்திருச்சு அந்த புள்ள என்று அசால்டாக சொல்வார்கள் இளவட்டங்கள். இப்படியே பேசிட்டு இருந்தா ஏழ்ரய கூட்டிருவாணுங்க… ஆட்டும் அப்றம் பாக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பிட்டே இருப்பார்கள் மதுரைக்கார மண்ணின் மைந்தர்கள். தாய்மொழி தினத்தில் எனக்கு தெரிந்த என் மதுரை மண்ணின் பாஷையில் இருந்து சில வார்த்தைகளை எழுதியுள்ளேன். மதுரை மக்களே நீங்களும் உங்க பங்குக்கு எழுதுங்கப்பு.

கோவை பாஷை

     இல்லீங்… என்ட்ர ஊரு கோயமுத்தூருங்கோ… மயக்கும் கொங்குத்தமிழ்

 உலக தாய் மொழி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் இயல்பான மரியாதையோடு தவழ்ந்தாடும் கோவை பாஷை குறித்த சில சுவாரசிய தகவல்கள் தமிழக மக்கள் தமிழ் மொழியே பேசினாலும் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு.

Coimbatore.jpg

நெல்லைக்கு ஏலே

அவர்கள் பேசும் பாஷையும் வித்தியாசமானது. சென்னை என்றால் இன்னா? நெல்லைக்கு ஏலே.. கோவைக்கு சென்றால் ஏனுங்க, இல்லீங், அம்மணி என ஒவ்வொரு மண்டல மக்களும் தங்களுக்கான பாஷையில் அள்ளி தெளிப்பார்கள்.

மரியாதை கலந்த கோவை பாஷை கொங்கு மண்டலத்துக்குள் வரும் கோவையில் கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும். கோவை மக்கள் பேசும் சாதாரண வார்த்தைகளிலேயே இயல்பான மரியாதை கலந்து மண் மணம் வீசும்.

courtallam-mainfalls

வெள்ளந்தி தனத்தைக் காட்டும் கோவை பாஷையில் மரியாதை மட்டுமின்றி அன்பும் கலந்தே இருக்கும். அவர் கேள்வியாகட்டும் அல்லது பதிலாகட்டும் அந்த பாஷையே ஒரு வெள்ளந்தி தனத்தைக் காட்டும்.

ஏனுங் நமக்கு கோயம்புத்தூருங்களா? முன்பின் தெரியாதவர்களின் பேச்சில் மண் மணம் தெரிந்தால் போதும் ஏனுங் நமக்கு கோயம்புத்தூருங்களா? என கேட்பதிலேயே எதிரிலிருப்பவர் விழுந்து விடுவார் அப்படி ஒரு சிறப்பு பெற்றது கொங்கு மண்டலத்தின் கோவை தமிழ்..
கோவை சரளாவின் வட்டார மொழிவளம் கோவை தமிழ் உச்சரிப்புகளை ரசிக்காது காதுகள் இருக்காது. எத்தனையோ காமெடி நடிகைகள் இருந்தும் கோவை சரளா இன்றளவும் மார்க்கெட்டில் இருப்பதற்கு அவரின் வட்டார மொழிவளமே காரணம் என்பது யாரும் மறுக்க முடியாது.

சென்னை  பாஷை

துன்னு.. குந்து.. இஸ்துகினு.. சென்னை செந்தமிழ்… அழகு தமிழ்

 சென்னை மொழி பேசுவதற்கு அலாதியான மொழி. நல்ல அழகான தமிழ் சொற்கள் விரவிக் கிடக்கும் மொழி சென்னை செந்தமிழ். அய்ய இன்னா.. என்று சாதாரணமாக சொல்லிவிட்டால் கூட போதும். உடனே எதிரில் இருப்பவர் இளக்காரமான ஒரு பார்வை பார்த்து கேட்பார்கள் நீ என்ன மெட்ராசா.. என்று. அவ்வளவு மரியாதை சென்னை செந்தமிழுக்கு..

21-1487681726-chennai-central-railway-station1-600.jpg

சென்னையில் வந்து கால் பதிக்காத அயல்நாட்டுக்காரர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். டச்சு, போர்ச்சுகல், பிரெஞ்சு, இங்கிலாந்து, ஐரோப்பியர்களின் வருகைக்கு முன் அரேபியர்கள், சீனர்கள் என யார் வந்தாலும் சென்னையை தொடாமல் சென்றதில்லை. காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். வங்காள விரிகுடாவின் விரிந்த பகுதியைக் கொண்டது சென்னை என்று.

மத்தவங்க பாஷை இத்தனை நாட்டுக்கார்கள் சென்னைக்கு வந்து சென்றதும், ஆட்சி செய்து சென்றதும் போனதால் ல் பல மொழிச் சொற்களை சென்னையில் கலந்திருக்கும். அதனையும் தமிழ் போலவே பாவிப்பார்கள் சென்னை தமிழர்கள். அது வேறுமொழி சொல் என்பது அவர்களுக்கு தெரியாததுதான் இந்த மொழியின் சிறப்பே.

துன்னு..

373727-pti-chennai-metro-ed

பாத்துகினு நிக்கிற துன்னு.. என்று தெரு முனையில் இட்லி கடை வைத்திருக்கும் அம்மா தட்டில் இட்லியை வைத்து சர்வ சாதாரணமாக சொல்வார். துன்னு என்பதை கேட்டாலே வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பலருக்கு இட்லி சாப்பிடுவதற்கு பதில் வாந்திதான் வரும் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். துன்னு என்பது ‘தின்’ என்ற அழகிய தமிழ்ச் சொல்லின் வழக்குச் சொல். “என்னை தீ அள்ளி தின்னச் சொல் தின்பேன் என்று வைரமுத்து கவிதையை ‘டுயட்’ திரைப்படத்தில் பிரபு வாசித்தால் கை தட்டி ஆராவாரம் செய்பவர்கள் சென்னைக்காரர் சொன்னால் சிரிக்கிறார்கள். என்ன செய்ய?

குந்து..

ஊட்டுக்கு வந்ட்டு நின்னுனுகிற.. குந்து.. என்று சொல்லிவிட்டால் போதும், என்ன உட்கார் என்று சொல்லம்தானே என்பார்கள். தாய் மொழி என்பது தானாய் வருவது. உட்கார் என்ற சொல்லை விட இலக்கிய தரமும், அழகும் கொண்டது குந்து என்ற சொல்.. அதனால்தான் நமது பாவேந்தர் பாரதிதாசன் “காற்று குந்திச் சென்றது; மந்தி வந்து குந்தி” என்று குந்து, குந்தி என்ற சொற்களை அழகாக தனது கவிதைகளில் பயன்படுத்தி இருப்பதை காணலாம்.-  

அனைவருக்கும் உலகதாய்மொழி தினம் வாழ்த்துகள்

நன்றி one india tamil படித்ததில் பிடித்தது

தமிழ்நாட்டில் புது IPL HERO டி.நடராஜன் (வறுமையை வென்று கிரிக்கெட்டில் ஜெயித்தார்)

சென்னை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி.நாடராஜன்தான் இப்போது டாக் ஆப் தி டவுன். அனைத்து ஊடகங்களும் இப்போது அவர் வசிக்கும் சின்னப்பம்பட்டி கிராமத்தை சுற்றி வருகின்றன. இத்தனைக்கும் காரணம்,

maxresdefault

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர், ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதுதான். சர்வதேச கிரிக்கெட் ஆடாத உள்ளூர் ஆட்டக்காரர் ஒருவர் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

இது நடராஜனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். பஞ்சாப் அணிக்காக ஆடப்போகிறார் என்பதால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மொகாலியில் அவர் தனது திறமையை மேலும் பட்டை தீட்டிக்கொள்ள அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும் என்பது அவரின் கூடுதல் மகிழ்ச்சிக்கு காரணம்.

வறுமையை வென்று கிரிக்கெட்டில் ஜெயித்தார்.. ஐபிஎல் ஹீரோ நடராஜன் வாழ்க்கை, இளைஞர்களுக்கு பாடம்

21-1487652953-natarajan-cricketer45

டென்னிஸ் பந்து வீரர்

டி.நடராஜன் என்று அறியப்படும் இந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரின் முழுப்பெயர் தங்கராசு நடராஜன். வளர் இளமை காலங்களில், கிராம அளவில் டென்னிஸ் பந்து போட்டிகளில் பங்கேற்று வந்தார். டென்னிஸ் பந்தை கொண்டே பேட்ஸ்மேன்களை அவர் திணறிடிக்கும் திறமை அவருக்குள் இருந்த கிரிக்கெட் ஆசையை சுடர்விடச் செய்தது.

21-1487652976-karthick-naren-677.jpg

சென்னை கொடுத்த திருப்புமுனை

சொந்த ஊரிலேயே இருந்தால் கிரிக்கெட்டில் சோபிக்க முடியாது என்பதை அறிந்து கொண்ட நடராஜன், சென்னை வந்தடைந்தார். சென்னையில்தான் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும், கார்க் பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு லீகில் ஜாலி ரோவர்ஸ், விஜய் சிசி ஆகிய அணிகளுக்காக ஆடி தனது திறமையை நிரூபித்தார்.

சர்ச்சை

இரண்டே ஆண்டுகள்தான். அதற்குள்ளாக நடராஜனின் திறமை காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து நடராஜன் முதல் தர கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2015-16-ல் பெங்கால் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணிக்கு முதல்முறையாக அறிமுகமானார். ஆனால் இவர் பந்தை எறிவதாக, சந்தேகம் எழுப்பப்பட்டது. எனவே பந்து வீச்சு ஸ்டைலை கொஞ்சம் மாற்றி மீண்டும் முதல்தர கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்.

21-1487652953-natarajan-cricketer45

சோதனையை வென்று சாதனை

சோதனையான அந்த காலகட்டத்தில், பந்து வீச்சு ஸ்டைலை மாற்றி சிறப்பாக பந்து வீச நடராஜனுக்கு உதவியது, முன்னாள் தமிழ்நாடு இடது கை பவுலர் சுனில் சுப்ரமணியம் ஆகும். சமீபத்தில் தொடங்கப்பட்ட, தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20யில்

lakshmipathy_balaji-500x400.jpg

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடினார். முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி இவரது பந்து வீச்சிற்கு ஐடியாக்கள் கொடுத்து மெருகேற்றினார்

ஐபிஎல் ஹீரோ

images-2

தற்போது ரஞ்சியிலிருந்து மற்றொருபடி முன்னேறி ஐபிஎல் 2017ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இவர் ஆட உள்ளார். சர்வதேச பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச வேண்டிய சூழ்நிலை அப்போது ஏற்படும், சர்வதேச தரம்வாய்ந்த பவுலர்களுடன் பழகும் வாய்ப்பும் இவருக்கு கிடைக்கும். இதன் மூலம், நடராஜனின் ஆட்டத் திறன் மேலும் மெருகேரும் என நம்பலாம். இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால், அனேகமாக பஞ்சாப் அணி நடராஜனை இந்த சீசனிலேயே களமிறக்கும் என நம்பலாம்

கோடிகளின் பூஜ்யம் தெரியாது

இதுகுறித்து நடராஜன் கூறுகையில், “நான் ஐபிஎல் தொடரில் ஆட உள்ளது பற்றிதான் யோசித்துக்கொண்டுள்ளேன். கிடைத்துள்ள பணத்தை பற்றியல்ல. உண்மையை சொன்னால் 3 கோடிக்கு எத்தனை பூஜ்யம் என்பது எனக்கு தெரியாது. ஐபிஎல் தொடரில் ஆடுவதன் மூலம், எனது கிரிக்கெட் திறமை மேம்படும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

தினக்கூலி தொழிலாளி

21-1487653139-natarajan-ipl4

நடராஜன் தந்தை நூற்பாலையில் தினக்கூலி தொழிலாளியாகும். தாயார், சாலையோர சிக்கன் மற்றும் ஸ்நாக்ஸ் கடை வைத்துள்ளார். 5 உடன்பிறப்புகளில் நடராஜன்தான் மூத்தவர். எனவே இளைய சகோதர, சகோதரிகளின் படிப்பு, திருமண செலவுகளை 25 வயதாகும் நடராஜனே கவனித்துள்ளார். கிரிக்கெட் ஆடி வந்த வருமானத்தை கொண்டே இதை பூர்த்தி செய்துள்ளார். ஒரு சகோதரிக்கு திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

நடராஜன் கனவு

“எங்கள் ஊரில் நல்லதாக ஒரு வீடு கட்ட வேண்டும். எனது சகோதர சகோதரிகள் இன்ஜினியரிங், சார்டட் அக்கவுண்ட் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களை மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டும். இதற்கெல்லாம், இப்போது கிடைத்துள்ள பணம் உதவிகரமாக இருக்கும்” என்கிறார் நடராஜன். வாழ்க, வளர்க. நீங்களும் வாழ்த்தலாமே.