பிசாசின் கடல்..கேட்டாலே அதிர வைக்கும் பெயர். ஜப்பான் மக்களுக்கும் அப்படித்தான். உலக மேப்பில் இப்படியொரு கடல் உள்ளதா என்றால்.. இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் பசிபிக் கடலின் ஒரு பகுதியை தான் இப்படி அழைக்கிறார்கள். ஜப்பான் கடற்கரை பகுதியில் உள்ள இந்த பிசாசின் கடலுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது ‘டிராகன் டிரையாங்கிள்’.அதாவது டிராகன் முக்கோணம்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ளது மியாகே தீவு. இப் பகுதியில் இருக்கிறது பிசாசின் கடல். ஜப்பானிய மொழியில் ‘மா-நோ-உமி’ என்கிறார்கள். இதன் வழியாக சென்ற யாரும் உயிரோடு திரும்பியதில்லையாம்.
இப்பகுதியை கடந்து சென்ற பல கப்பல்கள், படகுகள் மர்மமான முறையில் மாயமாகியிருக்கின்றன. அதில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலும் இல்லை. இப்பகுதியில் திடீர் திடீரென தீவுகள் உருவாவதும், இருக்கும் தீவுகள் மறைவதும் பீதியை ஏற்படுத்துகிறது.


அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையை ஒட்டியுள்ள பெர்முடா முக்கோணத்துக்கு நேராக பூமிப்பந்தின் மறுபுறத்தில்தான் ஜப்பானின் பிசாசு முக்கோண பகுதி இருப்பதால் மக்களை அதிகம் பீதிக்கு உள்ளாக்குகிறது ‘மா-நோ-உமி’ முக்கோணம். பெர்முடா முக்கோணம் போல மாநோஉமி வழியாக செல்லும் கப்பல்கள், விமானங்களும் அடிக்கடி மாயமாகியிருக்கின்றன.
1952 – 1954 காலகட்டத்தில் டிராகன் முக்கோண கடல் பகுதி வழியாக சென்ற ஜப்பானின் ராணுவ கப்பல்கள் நிலை என்னவானது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. அந்த கப்பல்களில் பயணித்த 700 பேரின் நிலை பற்றியும் தெரியவில்லை.இதை பற்றி கண்டுபிடிக்க 31 விஞ்ஞானிகள் அடங்கிய குழு டிராகன் முக்கோணத்தின் முக்கிய பகுதிக்கு கப்பலில் சென்றுள்ளனர். அவர்களும் திரும்பி வரவில்லை.
அதற்கு பிறகு ஜப்பான் அரசு சுதாரித்துக் கொண்டு அப்பகுதியை அபாயகரமான பகுதியாக அறிவித்தது என்கிறார்கள் டிராகன் முக்கோணம் பற்றி ஆராய்ச்சி செய்து வருபவர்கள். விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர் வேறுமாதிரி சொல்கிறார்கள். ஜப்பானிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் எரிமலைகள் வெடிப்பது, நில அதிர்வு காரணமாக கடலின் மேல் பகுதியில் திடீர் அலைகள் உருவாகின்றன. அதில் சிக்கும் கப்பல்கள் விபத்துக்குள்ளாகின்றன.
டிராகன் முக்கோண பகுதியில் சில தீவுகள்கூட திடீர் திடீரென மாயமாகின்றன. திடீரென புதிதாக தீவுகள் உருவாகின்றன. இதற்கெல்லாம் கூட கடல் அடியில் ஏற்படும் நிலநடுக்கமும் எரிமலைகளும்தான் காரணம் என்கின்றனர்.நெருப்பை கக்கும் டிராகன்கள்தான் இதற்கு காரணம் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் ஜப்பானிய புராண கதைகளை உதாரணம் காட்டுகின்றனர். ‘மியாகே தீவுப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான டிராகன்கள் வாழ்ந்தன. அந்த இனம் அழிந்துவிட்டாலும் அவற்றின் அமானுஷ்ய சக்தி இன்னமும் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மியாகே தீவுப்பகுதியை தங்களது சாம்ராஜ்யமாக அவை கருதுகின்றன. தங்களது சாம்ராஜ்யத்துக்குள் வருபவர்களை டிராகன் சக்திகள் விடுவதில்லை. அந்த வழியாக வரும் கப்பல்கள், படகுகளை அழிக்கின்றன’என்கின்றனர் அவர்கள். பெர்முடா முக்கோணம் போலவே.. இன்னமும் மர்மமாக இருக்கிறது பிசாசு கடல்….!
இந்த கடலை பற்றி ஒரு ஹாலிவுட் திரைப்படம் எடுத்தால் மக்கள் மிகுந்த எச்சரிக்கை உடன் இருப்பார்கள்!